புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் வி.வி. ஷிர்வாத்கர் நினைவாக, மராத்தி மொழி தினம், மகாராஷ்டிரா முழுவதும் ஆண்டுதோறும் பிப். 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
‘மராத்தி பாஷா தின்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த நாளை முன்னிட்டு, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று சிறப்புச் சட்ட மசோதாவை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மராத்தி மொழி கட்டாயமாகிறது. 2020-21ஆம் கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கட்டாயமாக்கப்படும் இச்சட்டம், அடுத்தடுத்த ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இந்தச் சட்ட மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல்செய்து பேசிய, மொழி வளர்ச்சித் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து மராட்டிய மண்ணிலும் தாய் மொழி கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இச்சட்டத்தை அனைத்து பள்ளிகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், மீறும் பள்ளிகள் ஒரு லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோனியாவுக்கு எதிர்ப்பு, பிரதீபா பாட்டிலுக்கு ஆதரவு! - மராத்திய புலிகளின் அரசியல்