கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பொதுமக்கள் மீறுகிறார்களா என்பதைக் கண்காணிக்க பல்வேறு மாநிலங்களில் மாநில ஆயுத காவல்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிராவில்தான் கரோனாவின் தாக்கம் பெருமளவு உள்ளதால் மாநில ஆயுத காவல்படைக் குழு மும்பையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையில், 45 நாள்களாக கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்த அந்தக்குழு மும்பையிலிருந்து ஹிங்கோலி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இதனால், அவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 194 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் 101 வீரர்களின் முடிவு வெளிவந்ததில் 95 வீரர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்த நிலையில், ஆறு வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை அம்மாவட்ட சுகாதார அலுவலர் உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அவர்கள் ஆறு பேரின் உடல்நலமும் சீராக உள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பீதி: இறந்தவரின் உடலை எடுக்க மறுத்த கிராம மக்கள்