திராவிடர் கழகத் தலைவரும், அனைவராலும் ஆசிரியர் என்று அழைக்கப்படுபவருமான கி.வீரமணி, இன்று தனது 88 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கி.வீரமணி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், “ கையில் தடியேந்திடும் அவசியம் இன்றும் எனக்கு இல்லை; காரணம், ஏற்கனவே நான் பெரியாரின் கைத்தடியாக ஆக்கப்பட்டுள்ளேன்.
தளர்வு நடை இதுவரை நான் அறியாதது. காரணம், உணர்வு ஊற்று உங்களிடமிருந்து வந்து என்னை உந்தி உந்திக்கொண்டே ஈரோட்டு லட்சியப் பாதையில் நெஞ்சை நிமிர்த்தி நேரிய வழியில், நெறி பிறழாது வேக நடைபோட வைப்பதால்! தேவைகள் குறைவு தந்தை பெரியார் தந்த மந்திரம். ஏமாற்றம் எதிலும் இல்லை; காரணம் எதிர்ப்பார்ப்பு எல்லை தாண்டி, எதிலும் வளர்த்துக் கொள்ளப்படாததால்! தேவைகளோ மிகக் குறைவு! தந்தை தந்த மந்திரம் அது! தெளிவோ மிக நிறைவு! உரியவரிடம் பாடங்கற்றதால்!
நான் பாதுகாப்புடன் இருக்கிறேன் காரணம் நான் அமர்ந்திருப்பது அறிவாசானின் தோள்மீது! என்னை எப்போதும் கண்காணித்து, காத்திருப்பது கருஞ்சட்டை வீரர்களும், வீராங்கனைகளும், கருணை உள்ளங்களும், கடமையாற்றத் தவறாத கரங்களும்தானே! திராவிடம் வெல்லும்! “ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்