டெல்லியில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், குளிர் காலம், பண்டிக்கைக் கொண்டாட்டங்கள் காரணமாக சுவாசப் பிரச்னைகள் உள்ளிட்டவை அதிகரித்து டெல்லியில் அதிக அளவில் கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது கரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று (நவ.17) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "கரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி முதல் நாள்தோறும் ஏறத்தாழ 5,000 பேர் புதிதாக பாதிப்படைந்து வருகின்றனர்.
டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான திட்ட அறிக்கை துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோவிட் -19 பாதிப்பு நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் டெல்லி அரசின் அனைத்துத் துறைகளும் இருமடங்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கோவிட் -19 பாதிப்பு அதி தீவிரமாக உள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பாக ஒரு திட்டத்தை நாங்கள் மத்திய அரசிற்கு அனுப்பி உள்ளோம்.
இதுபோன்ற கடினமான காலங்களில் டெல்லி மக்களுக்கு உதவியதற்காக மத்திய அரசுக்கு டெல்லி மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.