கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியைச் சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சட்டப்பேரவை முடிவில் தலையிட முடியாது என்றும், அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வலியுறுத்தக் கூடாது எனவும் தீர்ப்பு அளித்தது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை கூடியது. அதில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுக்கக் கூடாது என தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயர் அவையை அடுத்த நாளுக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.