இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது பல தளர்வுகளுடன் அது நீண்டுவருகிறது. மாணவர்களின் நலன் கருதி நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் பொதுத் தேர்வையொட்டி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவந்தன.
ஆனால், கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாலும், பல்வேறு பள்ளிகள் கரோனா முகாம்களாக பயன்படுத்தப்பட்டுவருவதாலும் மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவந்தனர். பொதுத் தேர்வு நடத்தப்படுவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தவிருந்த தேர்வை ரத்து செய்தது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. இருந்தபோதும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என கர்நாடகா அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, அம்மாநிலத்தில் எட்டு லட்சத்து 48 ஆயிரத்து 203 மாணவர்களுக்கு இரண்டாயிரத்து 879 தேர்வு மையங்களில் இன்று (ஜூன் 25) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முகக் கவசம், தகுந்த இடைவெளிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை வசதிகளுடன் ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வெழுதினர். மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டுவருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் சுதாகரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் நேற்று (ஜூன் 24) சோதனை மேற்கொண்டனர்.