பெங்களூரு: கரோனா பரவல் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் எடியூரப்பா கூட்டத்தைக் கூட்டினார்.
இக்கூட்டத்தில் தற்போதைய கரோனா சூழல்கள், வேளாண்மைச் சாத்தியக்கூறுகள், வெள்ளம் ஏற்படும் சமயத்தில் செய்யவேண்டிய நடைமுறைகள் என அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டது. மேலும், கரோனா, கரோனா அல்லாத சிகிச்சைகள் அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அலுவலர்ளுக்கு உத்தரவிட்டார். அதோடு தொற்று பரிசோதனை நிலையங்களையும் தீவிரமாகக் கண்காணிக்கவும், அதிகப்படுத்தவும் உத்தரவிட்டார்.
ஒரு லட்சம் அதிவிரைவு தொற்று கண்டறியும் கருவிகள் வாங்கி மாவட்டம் வாரியாக கொடுத்திருப்பதாகத் தெரிவித்த அவர், அதனை அவசரக் காலங்களில் மட்டும் பயன்படுத்தும்படி அறிவுரைத்தார்.
பெங்களூரு நகரம், தட்சிணா கன்னடம், தார்வாட், பெல்லாரி, உடுப்பி, கல்பூர்கி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளது. பிதர், தார்வாட், கடாக், மைசூர் ஆகிய நகரங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது. இவையிரண்டையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் இக்கூட்டத்தில் அறிவுறுத்தினார்.