ஜம்மு காஷ்மிர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்து வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை சோபியன் மாவட்டத்திற்குட்பட்ட ஹர்மாய்ன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்களின் வருகையை அறிந்த பயங்கரவாதிகள், ராணுவப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
தற்போது இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளுடன், பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
இதேபோன்று பூன்ச் மாவட்டத்தில் நேற்று மாலை பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.