2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஜம்மு - காஷ்மீர், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும்; லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக அம்மாநில தலைவர்களின் கைது, ஊரடங்கு உத்தரவு, தொலைத்தொடர்பு துண்டிப்பு என ஏராளமான செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு இன்றுடன்(ஆகஸ்ட் 5) ஒரு ஆண்டு ஆகிறது.
கிட்டத்தட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம், தொழில் நடவடிக்கைகள், மக்களுக்கான அடிப்படை வசதிகளில் முன்னேற்றம், தீவிரவாத செயல்கள் தடுத்து நிறுத்தம் என ஏராளமான வாக்குறுதிகளை பாஜக அரசு அன்றைய தினம் கொடுத்து உறுதியளித்தது.
இந்த ஒரு ஆண்டில் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின், என்ன மாதிரியான மாற்றங்கள் ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்துள்ளன என்பதைப் பார்க்கலாம். மாநிலங்கள் பிரிப்புக்கு பாஜக அரசு முதன்மையான காரணமாக கூறிய பொருளாதார முன்னேற்றம் பற்றி ஜம்மு - காஷ்மீர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சேக் ஆஷிக்கிடம் பேசினோம்.
அவர், ''சிறப்புச் சட்டம் 370 மற்றும் 35 ஏ ரத்து நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்தது. அன்றைய நாளிலிருந்து சரியாக 7 மாதங்கள் முழு ஊரடங்கில் மாநிலம் இருந்தது. அது முடிந்து தொழில் நடவடிக்கைகள் தொடங்கிய சில காலத்தில் கரோனாவால் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஆண்டு முழுமையான ஊரடங்கு ஜம்மு - காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சிதைந்துள்ளது. இதுவரை சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநில பொருளாதார இணை அழைப்பாளர் ஆப்ரார் அஹ்மத் கான் பேசுகையில், '' அனைத்து துறைகளும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் போக்குவரத்தும், சுற்றுலாத் துறையும் கடந்த 12 மாதங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால் ஒவ்வொரு நபரும் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். சிறப்புச் சட்ட ரத்திற்குப் பின் மாநில மக்கள் நம்பிக்கையின்றி, துயரத்தில் இருக்கின்றனர்'' என்றார்.
இதனைத்தொடர்ந்து வீட்டுப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ரஷீத் பேசுகையில், '' சிறப்புச் சட்ட நீக்கத்திற்குப் பின் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தோம். நீண்ட நாள்களுக்கு பின் ஜம்மு - காஷ்மீரில் தொழில் நடவடிக்கைகள் தொடங்கின. சிறப்புச் சட்ட நீக்கத்திற்குப் பின் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய போராடினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கரோனா வந்தது எங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் துறையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.200 கோடி வரை இழப்பைச் சந்தித்துள்ளோம்'' என்றார்.
சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், சிறப்புச் சட்ட நீக்கத்திற்குப் பின் ஜம்மு - காஷ்மீர் சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி வரை இழப்பைச் சந்தித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்பு முன்னாள் நீதித் துறை அலுவலர்கள், கல்வியாளர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் முறைசாரா குழு என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்ட நீக்கத்தின் ஒரு ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, பாஜக சார்பாக இந்நிகழ்வை விமர்சையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தினம்: இந்தியாவின் அத்துமீறல் நாளாக அனுசரிக்கும் பாகிஸ்தான்!