இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பல்வேறு விவகாரங்களில் கூட்டு நாடுகளின் நல்லுறவை பேணும் வகையில் சர்வதேச உறவின் நெறிமுறைகள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.
இந்திய, சீன ராணுவத்திற்கிடையே கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும், பேசிய ஜெய்சங்கர், "காலத்தைத் தாண்டி நிற்கும் சர்வதேச உறவின் முக்கியத்துவத்தை இச்சிறப்பு கூட்டம் எடுத்துரைக்கிறது. வழிமுறைகள், கருத்தாக்கத்திற்கு மட்டும் தற்போது சவால் விடுக்கப்படவில்லை. அதனை பின்பற்றுவதில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
உலகின் முக்கிய தலைவர்கள் அனைத்து விதத்திலும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை மதிப்பது, கூட்டு நாடுகளின் நலனை அங்கீகரிப்பது, பலதரப்புக்கு ஆதரவாக பொதுநலனை நோக்கி செல்வதன் மூலம் உலக ஒழுங்கை கட்டமைக்கலாம். இரண்டாம் உலக போருக்கு பிறகு, இந்தியாவுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த 75 ஆண்டுகளாக, இந்த வரலாற்று அநீதி திருத்தப்படவில்லை. உலகுக்கு இந்தியா ஆற்றிய பங்கினை சர்வதேச நாடுகள் புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: இந்தியா - சீனா மோதல்: விதிமுறைகள், நம்பிக்கைக்கு அடிக்கப்பட்ட சாவுமணி