உலகின் மிகப் பெரிய வர்த்தக அமைப்பாகக் கருதப்படும் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் இந்தியா சேராது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அமைச்சரின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம், 70, 80கள் காலகட்டத்தைச் சேர்ந்தவர்போல் ஜெய்சங்கர் பேசிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் இந்தியா சேரும்பட்சத்தில் அதில் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. ஆனால், இது குறித்த விவகாரம் நாடாளுமன்றத்திலோ எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தோ நடத்தபடவே இல்லை. ஜனநாயகத்தில் ஒரு சிலர் மட்டும் முடிவெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இறுதி முடிவு தெரியாதவரை நான் என் கருத்தைக் கூற முடியாது" எனத் தெரிவித்தார். ஆசியான் கூட்டமைப்பில் சீனா உள்பட 10 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. எட்டு ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புரூணை, கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.