பெருநிறுவனங்களில் முக்கிய மின்னஞல்களை அனுப்பும் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், இந்த இ-மெயில் ஃபார்வேர்டர் மோசடிகளுக்கு நீங்கள் ஆளாகும் வாய்ப்பு அதிகம். இதன்மூலம் பெரு நிறுவனங்களை ஹேக்கர்கள் குறி வைக்கிறார்கள்.
சமீபத்தில், ஒரு ஹேக்கர் இதுபோன்ற ஒரு முறையைப் பயன்படுத்தி ஒரு பிரபல நிறுவனத்தின் மின்னஞ்சல் கணக்கை ஹேக் செய்தார்.
இந்தச் சூழ்நிலையில், அந்நிறுவனம் தனது வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை இணைத்து வெளிநாட்டிலுள்ள உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான பில் ஒன்றை அனுப்பியது.
அப்படி அந்த நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, ஹேக்கர் புதிய பில்லுடன் வாடிக்கையாளருக்கு மீண்டும் மின்னஞ்சலை அனுப்பினார். இந்த புதிய மின்னஞ்சலில், ஹேக்கர் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு பதில் தனது சொந்த வங்கிக் கணக்கை இணைத்து அனுப்பியிருந்தார். மேலும், இரண்டாவது மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு ஹேக்கர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், சிறிது நேரத்தில் அனுப்பப்பட்ட இரண்டாவது மின்னஞ்சலால் சந்தேகம் கொண்ட அந்த வாடிக்கையாளர், இது குறித்து நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். சரியான நேரத்தில் அந்த வாடிக்கையாளர் சரியாக செயல்பட்டதால் பெரிய மோசடி தவிர்க்கப்பட்டது. மேலும், நிறுவனமும் தனது மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டது.
இந்த சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, கார்ப்பரேட் துறையிலுள்ள அனைத்து நிறுவனங்களும் மின்னஞ்சல் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுநர் சச்சின் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், "பெரு நிறுவனங்கள் ஒவ்வொரு கணினியிலும் தேவையான ஆன்ட்டி வைரஸை நிறுவ வேண்டும். அதே நேரத்தில்,நிறுவனங்கள் பைரேட்டட் ஆன்ட்டி வைரஸ்களை நிறுவக்கூடாது; ஏனெனில், அவை எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் அபாயம் உள்ளது" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!