ஈராக்கில் பெருகிவரும் ஊழல், வேலையின்மை உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அந்நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறை வெடித்தது. இந்தப் பேரணியால் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்களைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்டுக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், பெல்லட் குண்டுகள் ஆகியவைகளை வீசும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் 34 போராட்டக்காரர்கள், மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். சுமார் 1, 500 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டையடுத்து பாக்தாத்தில் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக ஈராக் தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் பிரதமர் அப்துல் மஹ்தி ஆட்சி பொறுப்பேற்று இன்னும் சில வாரங்களில் ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், மக்கள் போராட்டங்கள் அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஈராக் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு - ஏராளமானோர் காயம்!