ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது கடந்த 2007ஆம் ஆண்டில் ஜஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூபாய் 305 கோடி முதலீடு கிடைப்பதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ கடந்த 2017ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்த சிபிஐ, அவரை டெல்லி திகார் சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங்கியது.
இந்நிலையில், ஜஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கிய பிணையை மறு ஆய்வு செய்யக்கோரி சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு, சிபிஐ தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. மேலும், மறு ஆய்வு செய்யுமாறு அளிக்கப்பட்ட மனுவை ஆராய்ந்ததில், பிணை உத்தரவை மறு ஆய்வு செய்யும் அளவிற்கு எவ்வித பிழைகளும் ஏற்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.