நாட்டில் இதுவரை நான்கு கோடியே 55 லட்சத்து ஒன்பதாயிரத்து 380 பேருக்கு கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 72 ஆயிரத்து 179 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அதிக பரிசோதனை செய்யப்பட்டாலும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விகிதம் குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 11.7 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சோதனையானது இறப்பு விகிதத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.
கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் இன்று (செப்.3) வரை 1.75ஆகக் குறைந்துள்ளது, அதேபோல் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 77.09 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தற்போது எட்டு லட்சத்து 15 ஆயிரத்து 538 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அரசுத் துறையில் ஆயிரத்து 22 ஆய்வகங்கள், 601 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் ஆயிரத்து 623 ஆய்வகங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செப்.3) ஒரே நாளில் 83 ஆயிரத்து 883 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 53 ஆயித்து 406ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 376ஆக உயர்ந்துள்ளது.