கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையமே நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது. முன்னதாக, இது 550மீ நீளத்தில் இருந்தது. அதை 1,400 மீட்டராக உயர்த்த தென்மேற்கு ரயில்வே முடிவு செய்தது.
அதன் பின்னர் 1,505 மீட்டராக நீளமாக மாற்றும் பணிகளை தென்மேற்கு ரயில்வே செய்து வந்தது. இதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்து வரும் நிலையில், அது பயன்படுத்த தயராக உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இதனை திறந்து வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் தெரிவித்துள்ளார்.
’யங் இந்தியா' ஏற்பாடு செய்துள்ள 'ஸ்பிட் நோ ஓகே' பரப்புரையில் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இன்னும் ஒன்றரை மாதங்களில் ரயில்வே தளத்தில் பணிகள் நிறைவடையும், பிரதமர் மோடி இதனை திறந்து வைப்பார் என அறிவித்துள்ளார்.
ரயில் நிலையத்தின் அம்சங்கள்
இந்த ரயில் நிலையம் 1,500 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தற்சமயம், நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக இருக்கும் கோரக்பூர் ரயில் நிலையத்தின் ஒட்டுமொத்த நீளம் 1366 மீட்டராகும். இதனை மிஞ்சும் வகையிலேயே இந்த ரயில் நிலையம் உருவாகிக் கொண்டிருக்கிறது.