டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “எனதருமை நாட்டுமக்களே.. சில நாள்கள் முன்பாக, அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரிலிருந்து பெங்களூரூ வரை, விமானத்தை இடைவிடாது இயக்கி, நான்கு இந்தியப் பெண்கள் சாதனை படைத்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்போம். 10,000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து இந்த விமானம், 225ற்கும் மேற்பட்ட பயணிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
பெண்கள் அணிவகுப்பு
இந்திய விமானப்படையைச் சேர்ந்த, இரண்டு பெண் அலுவலர்கள், புதிய வரலாற்றைப் படைத்திருப்பதை, இந்தமுறை நடைபெற்ற ஜனவரி 26ஆம் தேதி அணிவகுப்பில் நீங்கள் கவனித்திருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் சரி, தேசத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், பல வேளைகளில், தேசத்தின் ஊரகப்பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற மாற்றங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறுவதில்லை. இதையும் நாம் பார்க்கிறோம்.
ஆகையால் தான், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. அப்போது, இது குறித்து கண்டிப்பாக மனதின் குரலில் கூறியே ஆக வேண்டும் என்று நான் தீர்மானம் செய்தேன். இந்தச் செய்தி மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. ஜபல்பூரின் சிச்காவைச் சேர்ந்த பெண்கள் ஒரு அரிசி ஆலையில், தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்கள்.
அன்று தொழிலாளி, இன்று முதலாளி
கரோனா உலகம் தழுவிய பெருந்தொற்று, உலகின் அனைத்து மக்களையும் பாதித்ததைப் போல, இந்தப் பெண்களும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய அரிசி ஆலையிலும் பணி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டது. ஆனால் இதனால் எல்லாம் நிலைகுலையாத இந்தப் பெண்கள், தாங்களே இணைந்து ஒரு அரிசி ஆலை தொடங்கத் தீர்மானம் செய்தார்கள்.
எந்த ஆலையில் அவர்கள் பணி புரிந்தார்களோ, அந்த ஆலைக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் இயந்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்தார்கள். இவர்களில் மீனா ராஹங்கடாலே என்பவர், பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சுய உதவிக் குழு ஒன்றை ஏற்படுத்தினார். அனைவரும் தங்களின் சேமிப்பு அனைத்தையும் மூலதனமாகத் திரட்டினார்கள்.
பாராட்டு
பற்றாக்குறையாக இருந்த தொகையை இவர்கள் ஆஜீவிகா மிஷன், அதாவது வாழ்வாதார இயக்கம் என்பதற்கு உட்பட்டு, வங்கியில் கடனாகப் பெற்றார்கள். இந்தப் பழங்குடியினப் பெண்கள், தாங்கள் முன்பு வேலை செய்துவந்த ஆலையையே விலைக்கு வாங்கி விட்டார்கள். இன்று இவர்கள் சொந்தமாக ஒரு அரிசி ஆலையை நடத்தி வருகின்றார்கள்.
மிகக் குறைவான நாள்களில் இந்த ஆலையானது கிட்டத்தட்ட மூன்று இலட்சம் ரூபாய் அளவுக்கு இலாபம் சம்பாதித்திருக்கிறது. இந்த இலாபத்தால் மீனா அவர்களும், அவருடைய கூட்டாளிகளும், முதலில் வங்கிக் கடனை முழுமையாகத் திருப்பிக் கட்டவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் தேவையான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கரோனா உருவாக்கிய சூழ்நிலைகளுக்கு எதிராக, தேசத்தின் பல்வேறு மூலைகளிலும் அற்புதமான பணிகள் அரங்கேறியிருக்கின்றன” என்றார்.
இதையும் படிங்க: சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து எழுதுங்கள்- இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!