நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போதுவரை சில மாநிலங்களில் தளர்வுகளுடன் அமலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் கரோனா அச்சத்தாலும், வேலைவாய்ப்பின்மையாலும் அவர்களது சொந்த ஊர்களுக்கே திரும்பியுள்ளனர்.
இந்த ஊரடங்கின் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பொருளாதார இழப்புகளை சந்தித்தன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலை மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "நாட்டில் நிலவிவரும் பொருளாதார சிக்கல்களை தீர்க்க பணப்புழக்கம் அவசியமாகிறது. இதற்கு 50 முதல் 60 லட்சம் கோடி ரூபாய் வரையிலான அந்நிய நேரடி முதலீடுகளின் தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தொற்று நோய் பரவாமல் தடுக்கவும், பரவிய தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரம் பெருமளவு செலவழிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலை, விமானம், உள்நாட்டு நீர் வழிச்சாலை, ரயில்வே, சரக்கு ஏற்றுமதி, மெட்ரோ உள்ளிட்ட கட்டுமானத் தொழில்களிலும், சிறு குறு நடுத்தர தொழில்கள் மூலம் நாம் அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும். நெடுஞ்சாலைத் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக மும்பை, அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றன.
ஒட்டுமொத்த உலகமும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், நாம் கட்டுமான துறைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மேலும், அரசு, அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இழந்த பொருளாதாரத்தை மீட்கவும் உதவும்" எனக் கூறியுள்ளார்.