தற்போதைய டிஜிட்டல் உலகில், அனைத்து செய்திகளும் விரைவாக விரல் நுனியில் அனைவருக்கும் சென்று சேர்கிறது. ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் போலி செய்திகள் என்பவை தவிர்க்க முடியாத பிரச்னையாக எழுந்துள்ளது.
போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இணையத்தில் உலாவும் போலி செய்திகளை எளிதில் கண்டறிய உதவும் Fakeweed புதிய செயலியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலியின் மூலம் ஒரு செய்தியோ தகவலோ சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு சில நொடிகளிலேயே அது உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை அறிந்து கொள்ள முடியும். இச்செயலியின் மூலம் எழுத்து வடிவில் இருக்கும் போலி செய்திகளைத் தவிர, ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் இருக்கும் போலி செய்திகளையும் எளிதில் கண்டுபிடிக்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐஐடியில் படிக்கும் மாணவர் அமன் சிங்கல் தனது நண்பர்களுடன் உருவாக்கியுள்ள இந்த செயலி, இன்னும் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மாணவர்களின் இந்த முயற்சியை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளார்.