மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இரு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் உரையாடினார்.
அப்போது பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துவருவது மிகுந்த கவலையளிக்கிறது. கரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களிலிருந்து புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதும், சமூக பரவலைத் தடுப்பதும் மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.
மகாராஷ்டிராவிலுள்ள 36 மாவட்டங்களில் 34 மாவட்டங்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் மும்பை, பூனே, தானே, நாசிக், அவுரங்காபாத் உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த அவர், பெரும்பாலான பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக உள்ளது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலான அரசு ஆட்சியிலுள்ள நிலையில், மத்திய அரசு முன்னதாக கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் குழுவை அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவித்தரார்.
பின்னர், குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அலுவலர்களுடன் பேசிய அமைச்சர்,
அகமதாபாத், வதோதரா, சூரத் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸின் தாக்கம் மிகவும் அதிகளவில் உள்ளதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக ஒரே நாளில் 441 தொற்றுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கரோனாவால் அதிகளவில் பாதிப்பிற்குள்ளான மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 ஆயிரத்து 541 பேரும், குஜராத்தில் ஐந்தாயிரத்து 804 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மேலும் 85 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா!