இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் ஆதித்திய பூரி. கடந்த 25 ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் எச்டிஎப்சி வங்கியில் நம்பி முதலீடு செய்ய முக்கிய காரணமாக இருந்தவர் ஆதித்திய பூரி.
70 வயதை எட்டியுள்ள இவர், இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறவுள்ளார். 2018-19ஆம் ஆண்டு ரூ.42.20 கோடி மதிப்பிலான ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் இவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர 2018-19ஆம் நிதியாண்டில் அவருக்கு ரூ.3.65 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது. மேலும் 2017-18 மற்றும் 2018-19ஆண்டு இவருக்கு வழங்கவேண்டிய போனஸிற்கும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், பூரிக்கு ஒரு வருடத்தில் இரண்டு ஆண்டுக்கான போனஸ் கிடைத்தது. இதன்மூலம் அவருக்கு ஒரே ஆண்டில் 38 விழுக்காடு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.
அவரைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான சந்தீப் பக்ஷி, 2019-20ஆம் ஆண்டு ரூ .6.31 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார்.
அதேபோல ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான அமிதாப் சவுத்ரி ரூ.6.01 கோடியையும், கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக் ரூ. 2.97 கோடியையும் தங்கள் ஊதியமாக பெற்றுள்ளனர்.