மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவை எதிர்த்து புதுச்சேரியில் வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி செப்டம்பர் 22ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இப்போராட்டத்தை முதலமைச்சர் கைவிட வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ஆளுநருக்கு மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் செய்தியில், "சட்டப் பேரவை உறுப்பினர் கூறுவது சரிதான். கரோனா உயிரிழப்பு புதுச்சேரியில் தற்போது அதிக அளவில் உள்ளது. கூட்டுப் பணிகளால் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
ஆனால் போராட்டங்களால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும். இது போராட்டத்துக்கான நேரம் அல்ல, உண்மையிலேயே இது கடும் கவலையை ஏற்படுத்துகிறது. கரோனா பரிசோதனை, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு கடன் பெற்றுச் செலவு செய்து வருகிறது.
இது பட்ஜெட்டில் எதிரொலிக்கும். இதனால் பொருளாதாரம் மட்டுமல்ல, பொது மக்களும் துன்பமடைந்திட நேரும். இந்த நேரத்தில் இந்தப் போராட்டம் கைவிடப்பட வேண்டும். இது தொடர்பான சட்டமன்ற உறுப்பினரின் கருத்தில் உடன்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.