டெல்லியில் ரிட்ஜ் சாலைப் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு நேற்று (ஆக. 22) ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், பயங்கரவாதியை சரணடையும்படி எச்சரித்தனர்.
இருப்பினும், அவர் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். காவல் துறையினரும் அதற்கு பதிலடி கொடுத்த நிலையில், சிறிது நேரத்தில் பயங்கரவாதியை கைது செய்து, லோதி காலனியில் உள்ள சிறப்பு செல் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர். ஐஇடி வெடி குண்டு ஒன்றும் பயங்கரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து, விசாரணையின்போது பயங்கரவாதி அளித்தத் தகவலின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் பகுதியில் இன்று காவல் துறையினர் அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடி பொருள்கள் நிரம்பிய ஜாக்கெட்டை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த இந்த பயங்கரவாதி திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, உத்தரப் பிரதேசத்தின் உத்ராலா பதியா பைசாஹி கிராமத்தில் வசிக்கும் மொஹமத் முஸ்தாக்கிம் கான் (வயது 36) எனத் தெரிய வந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'கரோனா பரவலில் தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' - உயர் நீதிமன்றம் காட்டம்