இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளும், பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள், பணம் போன்றவை வாகனங்களில் கடத்துவதை தடுக்க தமிழக பகுதியை ஒட்டியுள்ள புதுச்சேரி பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் நேரத்தில் காவல்துறையினர் தேர்தல் நடைமுறைக்கு உட்பட்டு எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த பயிற்சி கூட்டம்புதுச்சேரி காவல்துறை சார்பில் நடைபெற்றது.
மாநில சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிக் கூட்டத்தில் புதுச்சேரி மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சியின்போது தேர்தல் விதிமுறைகள் குறித்த கையேடு காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. தேர்தலின்போது கைப்பற்றப்படும் பொருட்களை அரசியல் தலையீடு இல்லாமல் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சியில் பங்கேற்ற காவலர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.