ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவையின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. 90 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்துக்கு நவம்பர் 4ஆம் தேதியிலும் 288 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு நவம்பர் 8ஆம் தேதியிலும் ஆட்சிக்காலம் நிறைவடைகிறது.
இந்நிலையில், இரு மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே இன்று இரு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த இரு மாநிலங்களிலும் பாஜகவே ஆளும் கட்சியாக இருந்துவருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் பாஜகவும் சிவசேனா கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.
காங்கிரஸ் கட்சியும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் 'கை'கோர்த்துள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 42 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் பிடித்திருந்தது. எனவே ஆளும் பாஜகவை வீழ்த்தவே இரு கட்சிகளும் இணைந்துள்ளன என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிப் பங்கீடும் முடிந்தது. அதன்படி, 123 தொகுதிகளில் காங்கிரசும் 125 தொகுதிகளில் தேசியவாத காங்கிரசும் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தலைவர் ப்ரித்விராஜ் சாவன் தெரிவித்திருந்தார்.
மேலும், இதர கூட்டணி கட்சிகளுக்கு 41 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் கட்டாயம் பாஜக கூட்டணியை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இரு கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன.
ஹரியானாவை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 47 இடங்களை பாஜக வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. பட்டியலினத்தவர்களின் வாக்கு வங்கி அதிகமாக உள்ள ஹரியானாவில் பகுஜன் சமாஜ் கட்சி அவர்களின் வாக்குகளை கவர்ந்தது. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளை இழந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தனியாகவே போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்தது. இதனை பாஜக தங்களுக்குச் சாதகமான சூழலாக பார்க்கிறது. எனவே இம்முறையும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் கனவில் இருக்கிறது.
இதையும் படிங்க:
மதவாதத்தின் மூலம் இளைஞர்களின் வாக்குகளை கவர்கிறது பாஜக-சிவசேனா!