பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ள கலப்பினம் கருத்து அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது. இந்நிலையில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சித்த ராமையா கலப்பினம் என்று ஒப்புக்கொள்கிறாரா? என ஈஸ்வரப்பா கேட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையாவின் கருத்துகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, “இந்திரா காந்தி யாரை திருமணம் செய்தார்? ராஜிவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலப்பினம் என்று சித்த ராமையா ஒப்புக்கொள்கிறாரா?
நாங்கள் சாதிகளுக்கு இடையேயான திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், காதல் (லவ் ஜிகாத்) என்ற பெயரில் சிறுமிகள் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றனர். அச்சிறுமிகளின் குழந்தைகளும் விற்கப்படுகின்றனர்.
இதையெல்லாம் சித்த ராமையா ஏற்றுக் கொள்கிறாரா? மேலும், அவர்கள் பசுவை தாய் என்கிறார்கள். ஆகையால் வயதான பசுக்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வீடுகளின் வாசல்களில் விட்டுவிடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அப்படியென்றால் வயதான காலத்தில் அவரது தாயை இப்படிதான் எங்காவது கொண்டு விடுவாரா? உள்ளாட்சி தேர்தலுக்கு (கிராம பஞ்சாயத்து) காங்கிரஸார் தேர்தல் அறிக்கை தயாரித்துவருகின்றனர்.
இதில் பசுவதையை அனுமதிப்போம் என்று சித்த ராமையா கூற தயாரா? இதுதொடர்பாக நான் அவருக்கு சவால் விடுகிறேன்” என்றும் ஈஸ்வரப்பா கூறினார். முன்னதாக லவ் ஜிகாத் மசோதா சட்டப்பேரவையில் விவாதத்துக்கு வந்தது.
அப்போது, 'சித்த ராமையா மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்தியாவை பல இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்தில் அவர்களுடன் பல்வேறு ஆழமான உறவுகள் வளர்ந்தன. கர்நாடகாவிலும் பல்வேறு கலப்பினங்கள் உள்ளன' என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஈஸ்வரப்பா இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் நெருக்கமாக இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன் - முன்னாள் முதலமைச்சர்