மக்களவையில் இன்று நீட் தேர்வு குறித்த விவாதத்தில் திமுக பங்கேற்றது. அப்போது திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நீட் தேர்வு குறித்து பேச எழுந்தார். ஆனால் ஆளும் கட்சியினர் கோஷம் எழுப்பியதால் சற்று பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையில் பேசிய டி.ஆர். பாலு, "நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்களிக்க தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. 27 மாதங்கள் கழித்த பின்னர் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்" என்றார்.
ஆனால் அரசு சார்பில் பதிலளிக்காததால், மக்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை ஒத்திவைத்தார்.