பருவமழை மற்றும் வேளாண் பருவத்தின் தொடக்கத்தில், விதைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு விவசாயிகளுக்கு, சாகுபடி அவர்கள் உழைப்புக்கு ஏற்ப வருமானத்தை ஈட்டி தருமா அல்லது பேரழிவை ஏற்படுத்துமா என்பது எப்போதுமே நிச்சயமற்றது. இந்தியா போன்ற விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டில் ஒவ்வொரு முறையும் இதுதான் கதை.
இந்த அமைப்பு சாரா துறையில் ஏற்கனவே பற்றி எரியும் சோதனை நிலைமைகள் போதாதென்று அதில் குறைவான காப்பீட்டுத் திட்டம் என்ற எண்ணெய்யை ஊற்றுகிறது. நெருக்கடி காலங்களில் விவசாயிக்கு போதுமான பாதுகாப்பு அவசியம் என்று 1979ஆம் ஆண்டில் பேராசிரியர் தண்டேகரின் ஆரம்ப பரிந்துரைகள் முதல், பயிர் காப்பீட்டு திட்டம் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
பயிர் பாதுகாப்பிற்காக , 'பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா' என்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டம், பல்வேறு மாற்றங்களையும் திருந்தங்களையும் சந்தித்தாலும் பயிர்களுக்கு விரிவான காப்பீடு என்பது இன்னும் தொலைதூர கனவு போல் தான் தெரிகிறது. பயிர் காப்பீட்டை அதிகபட்சம் 23 விழுக்காடு என்ற அளவில் பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வரும் விவசாய அமைச்சகம், மோடி யோஜனா திட்டத்தின் மூலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
ஆனால், உண்மையில், இரண்டு சாகுபடி பருவங்கள் கழிந்த பின்னரும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் காப்பீட்டு தொகையை திருப்பி தருவதில் இருக்கும் அலட்சியப்போக்கு, திட்டத்தின் நோக்கத்தைக் குறைத்து வருகிறது. பிரீமியம் தொகை சரியான நேரத்தில் செலுத்தப்பட்ட போதிலும், நெருக்கடி காலங்களில் பெயரளவிலான இழப்பீட்டை வழங்குவதில் கூட ஏற்படும் தாமதங்கள் விவசாயிகளை எரிச்சலடைய செய்துள்ளது. கடந்த ஆண்டு வரை, வங்கிகளால் வழங்கப்பட்ட பயிர் கடன்களிலிருந்து பிரீமியம் தொகை தொடர்ந்து கழிக்கப்பட்டன.
ஃபசல் பீமா யோஜனாவின் விதிகளை தளர்த்தியது மற்றும் திட்டதில் சேர்வது விவசாயிகளின் விருப்பம் போன்ற காரணங்களால் இந்த திட்டத்தில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மொத்த சாகுபடியும் தோல்வியடைந்தால், நெருக்கடி காலங்களில் விவசாயிக்கு பாதுகாப்பு என்பது எங்கே இருக்கிறது? பயிர் காப்பீட்டை சுமார் நாற்பது ஆண்டுகளாக கேலிக்குள்ளாக்கிய காரணிகள் இப்போது ஒரு வெளிப்படையான ரகசியமாக தெரிகிறது.
கடன்களை வாங்குபவர்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகையைப் வழங்குதல், சராசரி வருடாந்திர மகசூலைக் கணக்கிடுதல் போன்ற நியாயமற்ற நிபந்தனைகள் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பயனை அளிக்க மறுத்து விட்டன. காப்பீட்டுத் தொகையை வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தியதால் சிறு மற்றும் ஏழை விவசாயிகளில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவர்கள் காப்பீடு வாய்ப்பை இழந்துவிட்டதாக சிஏஜி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜார்கண்ட், கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு இன்னும் ஒரு ரூபாய் இழப்பீடு கூட கிடைக்கவில்லை. இது விவசாயிகளை மனச்சோர்வடையச் செய்கிறது. திட்டத்தில் உள்ள குறைகளை திருத்துவதற்குப் பதிலாக, இந்தத் திட்டத்தை தன்னார்வமாகவும் விருப்பமாகவும் மாற்றுவதன் மூலம் அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் போக்கு, பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் முறையாக இயக்கப்படும் ஜப்பான், சைப்ரஸ், கனடா போன்ற நாடுகளின் கடுமையான அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானது. அங்கெல்லாம் கடுமையான இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியிலும் கூட விவசாயிகளுக்கு உடனடி உதவி கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. பஞ்சம் மற்றும் வெள்ளத்திற்கு எதிராக பயிர்களைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த அமைப்பை பிரேசில் கொண்டுள்ளது.
இன்று வரை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டை உறுதி செய்ய சுவாமிநாதனின் பரிந்துரை செயல்படுத்தப்படவில்லை. பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை காப்பாற்றவும், இலாபகரமான விவசாய முறைகளை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து விரிவான செயல் திட்டத்தைத் தொடங்க வேண்டும்.
நாட்டில் உள்ள மண்ணின் தன்மை மற்றும் வெவ்வேறு பயிர் வகைகளுக்கு அவை பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்வது மற்றும் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் ஏற்றுமதி திறனை ஆராய்வது அவசியம். திட்டத்தை செயல்படுத்துவதில் பங்குபெறும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான மானியங்களும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். இது நாட்டிற்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உறுதியான வழிக்கு அடிகோலும்.
இதையும் படிங்க: ஷீலா ஐரீன் பந்த்: இந்தியாவின் மகள் பாகிஸ்தான் தாயாக உருவெடுத்த கதை!