டெல்லி: நாட்டின் மிகவும் பிரபலமான கோடீஸ்வரர்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் (BadBoy Billionaires) நெட்ஃபிலிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் இந்தியாவின் பிற வணிக அதிபர்களை உள்ளடக்கியது எனக் கூறப்படுகிறது.
இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மற்றும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், நெட்ஃபிளிக்ஸ் இன்க் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் என்டர்டெயின்மென்ட் சர்வீஸ் இந்தியா எல்.எல்.பியை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் சோக்ஸி கேட்டுக்கொண்டார்.
ஆவணப்படத்தை முன்கூட்டியே திரையிடக் கோரி சோக்ஸி அளித்த மனுவை நீதிபதி நவீன் சாவ்லா தள்ளுபடி செய்தார். மேலும், OTT ஊடக சேவையில் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த எந்த விதிமுறைகளும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அவர் பொருத்தமான துறையை அணுகுமாறு அல்லது இந்த விஷயத்தில் ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் அவர் கூறினார்.
கடந்த விசாரணையில், ஒரு நபரின் அடிப்படை உரிமைகளை மீற நெட்ஃபிளிக்ஸ் அனுமதிக்கப்படுகிறதா என்று மெஹுல் சோக்ஸியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கேட்டிருந்தார்.
நெட்ஃபிளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் நீரஜ் கிஷன் கவுல் மற்றும் தயான் கிருஷ்ணன் மேல்முறையீட்டாளருக்கு எந்தவொரு நிவாரணத்திற்கும் உரிமை இல்லை. ஏனெனில் அவர் இந்திய குடிமகன் அல்ல. அவர் தனது குடியுரிமையை கைவிட்டுவிட்டார். எனவே, அவர் மேல்முறையீட்டிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என வாதிட்டார்.
மெகுல் சோக்ஸி மேல் முறையீடு செய்தததைத் தொடர்ந்து ஒற்றை நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு நவம்பர் 6 ஆம் தேதி விசாரணைக்கு வர திட்டமிடப்பட்டது. ஆனால் இன்று (நவ.3) மெஹுல் சோக்ஸியின் வழக்கறிஞர் அவர் நவம்பர் 6ஆம் தேதி ஆஜர் ஆக இயலாது எனக்கூறி ஒத்திவைப்பு கோரினார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறி ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: திருடன் என்று கூறிய பொதுமக்கள்: திணறிய விஜய் மல்லையா!