இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் கரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் கொட்டும் மழையில் சுமார் 3 மணி நேரமாக சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பெங்களூரு ஹனுமான் நகரில் அரங்கேறிய இந்த சம்பவம், ’மனிதம் எங்கே’ எனக் கேள்வி எழுப்புகிறது. ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் அந்த முதியவரின் உடல் சாலையின் ஓரத்தில் நிராதரவாக போடப்பட்டது. கரோனாவின் அச்சம் அவருடைய உறவினர்களையும், அக்கம்பக்கத்தினரையும் கூட அந்த முதியவரிடமிருந்து விலக்கிவிட்டது.
நடந்தது என்ன?
ஹனுமான் நகரைச் சேர்ந்த அந்த முதியவர் மூச்சுத் திணறலால் சிரமப்பட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு அருகாமையிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கோரினார். இதனிடையே, தனது வீட்டருகே ஆம்புலன்ஸை நிறுத்தினால் அக்கம்பக்கத்தினர் பயப்படலாம் அல்லது தன்னையும் தனது குடும்பத்தாரையும் ஒதுக்கிவைக்கலாம் என நினைத்த முதியவர், சாலையின் சந்திப்பிற்கு ஆம்புலன்ஸை வரச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து ஆம்புலன்ஸில் ஏறுவதற்காக சீக்கிரமாகவே சாலையை நோக்கி புறப்பட்டுள்ளார்.
”அவர் செல்லும் வழியில் சாலையிலேயே மயங்கி விழுந்தார்” என முதியவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸுக்காக காத்திருந்த முதியவர் அதன் வருகைக்கு முன்னரே சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருடைய உடலை எடுக்க யாரும் முன்வராத நிலையில் 3 மணி நேரம் சாலையிலேயே கிடந்துள்ளது. இதன் பின்னரே ஆம்புலன்ஸ் அவருடைய உடலை எடுத்துச் சென்றது.
இது குறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர் அணில் குமார், “இது தொடர்பாக நிச்சயமாக விசாரிக்கப்படும். இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சிந்து நதிக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி