உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்துவருகிறது.
இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அது குறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 55 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 333 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து ஆறாயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 95.53 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 25 ஆயிரத்து 709 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கரோனா தொற்றுக்கு மூன்று லட்சத்து மூன்றாயிரத்து 639 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 16 கோடியே 20 லட்சம் 98 ஆயிரத்து 329 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (டிசம்பர் 20) மட்டும் ஒன்பது லட்சத்து 134 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகளவில் ஏழு கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 831 பேர் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 99 ஆயிரத்து 99 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் ஐந்து கோடியே 40 லட்சத்து 49 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு இரண்டு கோடியே 14 லட்சத்து ஆயிரத்து 300 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.