கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை நாட்டில் 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நோய் கண்டறிதல் மையங்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேலும் 121 அரசு மையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆந்திரா, அஸ்ஸாம், பிகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 35 தனியார் நோய் கண்டறிதல் மையங்கள் இயங்கிவருகிறது. இந்தியா முழுவதும் 157 நோய் கண்டறிதல் மையங்கள் உள்ளன.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், "கிருமி நோய் கண்டறிவதற்காக புனேவில் உள்ள தேசிய கிருமியியல் கழகத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது" என தெரிவித்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், "கரோனா வைரஸ் நோய் கண்டறிவதற்காக இந்திய மருத்துவ ஆராயச்சிக் கழகம் 29 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆய்வகங்களின் 16,000 சேகரிப்பு மையங்கள் நாடு முழுவதும் இயங்கிவருகிறது. நாள் ஒன்றுக்கு 12,000 பேரை சோதனைக்கு உட்படுத்தலாம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா