கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக 4ஜி இணைய சேவைத் துண்டிக்கப்பட்டு 2ஜி சேவை வழங்கப்பட்டது.
மீண்டும் 4ஜி சேவை வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இணையச் சேவை வழங்குவது குறித்து ஆராய உயர் மட்டக்குழு அமைக்க கடந்த மே 11ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், உத்தரவு பிறப்பித்து ஒரு மாதம் முடியப்போகின்ற நிலையில் இதுவரை உயர் மட்டக்குழு அமைக்கப்படவில்லையெனவும் இணைய சேவை வழங்குவது குறித்து ஆராய எந்தக்கூட்டமும் நடத்தப்படவில்லையெனவும் ஜம்மு - காஷ்மீர் ஊடக வல்லுநர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பாக அந்த அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளது.
மேலும், உயர் மட்டக்குழுவின் செயல்பாடுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் 4ஜி இணைய சேவை வழங்க இடைக்கால உத்தரவுப்பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.