காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய மக்களவைத் தொகுதியாக கருதப்படுவது ரேபரேலி. நேரு காலத்திலிருந்தே பல காலமாக காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் இந்தத் தொகுதியின் கீழ்வரும் ரேபரேலி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் அதிதி சிங் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கூடாரத்தில் அதிதி சிங்?
முன்னதாக, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனை எதிர்க்கட்சியினர் அனைவரும் புறக்கணித்தனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் அதிதி சிங் பங்கேற்றார்.
பிரியங்காவை புறக்கணித்த அதிதி சிங்
அதே நாளில், காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி தலைமையில் நடத்தப்பட்ட பாதை யாத்திரையில் அவர் கலந்துகொள்ளவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான அகிலேஷ் சிங்கின் மகள் அதிதி சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேபரேலி மக்களவைத் தொகுதியின் கீழ்வரும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரண்டு காங்கிரஸ் கட்சியின் கைவசம் உள்ளது. இரண்டு தொகுதிகள் பாஜகவிடமும் மீதமுள்ள ஒரு தொகுதி சமாஜ்வாதி கட்சியிடமும் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.