பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் செய்தி தொடர்பாளராக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பாஜக தேசிய தலைவர் நட்டா விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "புல்வாமாவில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை பாகிஸ்தான் அமைச்சரே ஒப்புக்கொண்டார்" என்றார்.
பிகார் தேர்தல் குறித்து பேசிய அவர், "பிகார் சட்டப்பேரவையில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும். பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் நிதிஷ்குமாரே எங்கள் தலைவர். லாலு பிரசாத் யாதவ் மோசமான ஆட்சியை வழங்கினார். ஆனால், நிதிஷ்குமாரோ அனைவரும் வியக்கும் வகையில் சிறப்பான ஆட்சியை வழங்கினார்.
மக்களுக்குத் தேவை வளர்ச்சிதான். லாலுபிரசாத் ஆட்சியின்போது பிகார் மக்கள் ஒடுக்கப்பட்டனர். அந்த மோசமான ஆட்சியில் இளவரசரே தேஜஸ்வி யாதவ் தான். 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், அவர்களால் தான் 20 லட்சம் பேர் பிகாரை விட்டு வெளியே சென்றனர். இதற்கு முதலில் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.