நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுவரும் நிலையில், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டு, ஐந்து வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டுவந்தது.
நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட மணிமேகலை பெண்கள் அரசுப் பள்ளியில் முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்தனர்.
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் 452 மையங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 88 ஆயிரத்து 750 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரைச் சாலை, படகு குழாம், புதுச்சேரி-தமிழ்நாடு எல்லைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டு போலியோ மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், 45 மொபைல் வாகனம் மூலம் போலியோ மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, புதுச்சேரியில் 99 விழுக்காடு போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. முழுமையாக போலியோவை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பாப்பா ஆ காட்டு... ' - குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றிய அமைச்சர் கே.பி. அன்பழகன்