தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை ஹைதராபாத்தின் ஷில்பா கலா வேதிகா கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அவருடைய இளைய சகோதரர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "நான் ஒரு மெகா ஸ்டார் ரசிகனாக இங்கு வந்துள்ளேன். என் அண்ணன் என் வாழ்க்கையின் நெருக்கடியான சூழல்களிலிருந்து என்னை மீட்டார். என்னுடைய இளமைக் காலத்தில் என் நாட்டைப் பற்றி யாராவது மோசமாகப் பேசினால் நான் வன்முறையில் ஈடுபடுவேன். அப்போதெல்லாம் அவர் பேசிய வார்த்தை என்னை பயங்கரவாதத்திலிருந்து விலக்கியது" என்றார்.
சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வரலாற்றை பிரதிபலிக்கும் படமான 'சாய் ரா' படத்தை ராம் சரண் தயாரித்ததில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். வழக்கமாக, தந்தைகள் தங்கள் மகன்களை படங்களில் அறிமுகப்படுத்துகிறார்கள் என சொன்ன அவர், சரண் தனது தந்தையை ஒரு பிரமாண்டமான வெற்றி திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.