பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராகக் குற்றச்சாட்டு எழுப்பினார். மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். சின்மயானந்தாவுக்கு எதிராக ஐபிசி 376சி இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாலியல் வன்புணர்வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறி எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். திடீர் திருப்பமாக பணம் பறிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவி தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்ததாக அவர் ஒரு வழக்குத் தொடர்ந்தார். சட்டக் கல்லூரி மாணவியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, சின்மயானந்தாவை காப்பாற்ற பார்க்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி, அக்கட்சி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டார். ஆனால், இதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்து பல தலைவர்களைக் கைது செய்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவிக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் இன்று பாதையாத்திரை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.