புதுச்சேரியில் வரும் 12ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூடவுள்ளது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவை செயலரிடம் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மனு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாமிநாதன், மக்கள் பிரச்னைகள் குறித்து பேச சிறப்பு சட்டப்பேரவையை கூட்டாத முதலமைச்சர் நாராயணசாமி, மக்களை குழப்புவதற்காக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தற்போது சிறப்பு சட்டப்பேரவையை கூட்டுவதாக குற்றம்சாட்டினார்.
குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை எதிர்த்து யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்றும், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறிய சாமிநாதன், இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘அதிமுக கூட்டணி நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு