ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கிய மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நேற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த கேள்விக்கு உணர்ச்சிவசப்பட்ட அவர், "ஒரு செய்தித்தாளில் ஆறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து நேற்று படித்தது அதிர்ச்சியளிக்கிறது, அவமானமாக உள்ளது.
இதுபோன்ற தவறுகளை செய்துவிட்டு தண்டனைகளிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் சிலருக்கு உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. காவல் துறை என்ன செய்கிறது? சட்டத்தின் மீதான பயம் எங்கே போனது?" என வேதனையோடு கேள்வியெழுப்பினார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையிலும் தமிழ்நாடு, ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது வேதனையின் உச்சம். இந்தச் சம்பவங்களையெல்லாம் நினைத்தே செய்தியாளர் சந்திப்பில் தனது உச்சபட்ச வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் சிதம்பரம்.