இந்தியாவில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக சத்தீஸ்கர் இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் தீவிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அங்குள்ள ஜங்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்வாடா கிராமத்தில், காவலர் ஒருவர் அவரது வீட்டில் பெற்றோர் கண்முன்னே நக்சல்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிரிழந்த காவலர் சோமரு போயம், ஃபர்சேகர் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்தார். ஜூன் 10ஆம் தேதி மருத்துவ விடுப்பில் வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று (ஜூலை 1) இரவு அவரது வீட்டிற்குள் நுழைந்த 12 நக்சல்கள் கோடாரி, அம்புகளால் சோமரு போயமை கொடூரமாகத் தாக்கி, கொலைசெய்துள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற அவரது பெற்றோரையும் நக்சல்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் போயம் பெற்றோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த காவலர் போயமின் உடலை உடற்கூறாய்வுக்காக பைரம்கரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: டெல்லி டூ லக்னோ : யோகியை வீழ்த்தும் தலைவியாக மாறுகிறாரா பிரியங்கா?