இந்தியர்களுக்கும் உணவுக்கும் எப்போதும் நீங்காத ஒரு பந்தம் உள்ளது. சுவையான உணவை தேடிச் சென்று சாப்பிடுவதில் இந்தியர்களுக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லலாம்.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான உணவுக்கு பெயர் போனதாக இருக்கும். ஆனால் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்கும் உணவு என்றால் அது பரோட்டாதான். ஐந்து நட்சத்திர ஹோட்டல் முதல் ஐந்தாம் தெருவிலுள்ள தள்ளு வண்டிக்கடை வரை பரோட்டாவுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் ரோத்தக்-டெல்லி பைபாஸ் சாலையிலுள்ள தபஸ்யா பரதா ஜன் ஜங்ஷன் என்ற கடையில் பரோட்டா ரசிகர்களுக்காகவே அட்டகாசமான அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தக் கடை உரிமையாளர்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான பரோட்டாக்களை வழங்கிவருகிறார்கள், அதுவும் ஒரு சலுகையுடன். இதனால் கடையில் மக்கள் கூட்டம் அள்ளுகிறது.
இங்கு தாயாரிக்கப்படும் பரோட்டாக்கள் ஒவ்வொன்றும் 2 கிலோ எடையுள்ளதாகவும் 2.5 அடி சுற்றுவட்டம் கொண்டதாகவும் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப் பெரிய பரோட்டாக்களாக அறியப்படும் இந்த பரோட்டாவை உண்பவர்களுக்கு மிகப் பெரிய பரிசு ஒன்றும் காத்திருக்கிறது.
50 நிமிடத்தில் இந்த பரோட்டாக்கள் மூன்றை சாப்பிடுபவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் இலவசமாக பரோட்டாகள் வழங்கப்படும் என்று இந்த உணவகம் அறிவித்துள்ளது.
போட்டியில் கலந்துகொள்ளாமல் பரோட்டாவை ரசித்து சாப்பிட வேண்டும் என்றால் அதற்கும் வாய்ப்புள்ளது. இரண்டு கிலோ எடையுள்ள இந்த பரோட்டாக்கள் ரூ. 150 முதல் 350 வரை கொடுத்து வாங்கி, பொறுமையாக ஆற அமர ரசித்தும் உண்ணலாம். பரோட்டா சாப்பிடுவது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
இதையும் படிங்க: அரசியல்வாதிகள் வந்தால் மட்டுமே இணைப்புக் கிடைக்கும் இலவச வைஃபை!