இந்திய - சீனா எல்லையில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் சீனா பொருள்கள் இறக்குமதி தடைக்காக நடத்தப்படும் பாரதிய சமன்-ஹுமாரா அபிமான் பரப்புரையில் சேர முகேஷ் அம்பானி உள்பட 50 பிரபல தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தொழிலதிபர் அம்பானிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், "சீன ராணுவம் ரகசியமான முறையில் நடத்திய திடீர் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இச்சம்பவம் ஒவ்வோரு இந்தியரின் மனதிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது வெறுப்புகளை சீனா மீது காட்ட முடிவு செய்துள்ளனர். ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் சீனாவைத் தாக்க இந்தியர்களிடையே உறுதியான தீர்மானம் உள்ளது.
நீங்களும், உங்கள் நிறுவனமும் எப்போதுமே தேசத்தின் ஒற்றுமையை காப்பாற்ற உறுதியாக இருக்கின்றனர். உங்கள் ஆதரவும் முன்முயற்சியும் நாட்டின் பிற தொழிலதிபர்களும் பின்தொடர ஊக்குவிக்கும். இந்தியாவை ஒரு சுய சார்புடைய பாரதமாக மாற்ற வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளனர்.