கரோனா தீநுண்மி நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக பல்வேறுவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐடி ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலிருந்து பணிபுரிந்துவருகின்றனர். இதனை ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, ரவிசங்கர் பிரசாத் மாநில தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்களை காணொலி வாயிலாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஏப்ரல் 30ஆம் தேதியோடு வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான காலக்கெடு முடிவடைவதாக மாநில அமைச்சர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய ரவிசங்கர் பிரசாத், "மின்னணுவியல் துறை உற்பத்தியில் இந்தியாவிற்கு பெரிய வாய்ப்பு கிடைக்கவுள்ளது. சீனா மீது மக்கள் கோபமாக உள்ளனர். இந்த நிலையைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
அமைச்சகம் மானியம் வழங்கியுள்ளது. மாநிலத்தின் ஒத்துழைப்பு பெரியளவில் பங்காற்றவுள்ளது. சமூக வலைதளத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
ஆரோக்கிய சேது செயலி அறிமுகப்படுத்தியதற்கு மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. மற்ற சாதாரண போன்களிலும் இந்தச் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பால் அதிர்ச்சி!