டெல்லி: இந்திய ஒழுங்குமுறை அலுவலர்களின் முறையான அனுமதி கிடைத்தால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் கரோனா தடுப்பூசி மருந்தை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம், கரோனா தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையை விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் கோவேக்சின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து பாரத் பயோடெக்கின் சர்வதேச நிர்வாக இயக்குநர் சாய் பிரசாத், பரிசோதனைகள் வெற்றியடைந்து, மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டால் அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் கோவேக்சின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்ததால், மூன்றாம் கட்ட சோதனையை தொடங்கவுள்ளோம். 14 மாநிலங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சோதனை நிலையங்களில் இந்த மருந்தை சோதிக்க உள்ளோம். ஒரு மருத்துவமனைக்கு 2,000 பேர் வீதம் இந்த சோதனைக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி மருந்து சோதனை வெற்றிபெற்றால், அதை அரசாங்கத்துக்கு விற்பனை செய்வீர்களா? அல்லது தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்வீர்களா? என கேட்டதற்கு, அரசாங்கம், தனியார் நிறுவனம் என இரண்டுக்குமே விற்பனை செய்வதுதான் எங்கள் நோக்கம். முறையான விநியோகத்திற்காக சில வெளிநாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தடுப்பூசிக்கான விலை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மூன்றாம் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடிப்பதே எங்களது தற்போதைய இலக்கு என சாய் பிரசாத் கூறினார்.