ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) இந்த வாரம் போபாலில் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. இதில், தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட அதன் உயர் செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜூலை 22 முதல் ஜூலை 25 வரை நடைபெறவிருக்கும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் அதற்கு பின்னர், அமைச்சரவையில் மறுசீரமைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், பகவத் தவிர, பொதுச் செயலாளர் சுரேஷ் 'பய்யாஜி' ஜோஷி, இணை பொதுச் செயலாளர்கள் தத்தாத்ரேயா ஹோசபாலே, கிருஷ்ண கோபால் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
இந்தக் கூட்டத்தில் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஆதரவாகவும், சீனப் பொருள்களுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுதேசி பொருள்கள் தயாரிப்புக்கு வழிகோலும் வகையில், ஆத்மநிர்பார் திட்டத்துக்கு ஆதரவாகவும் கருத்தியல்கள் உருவாக்கப்படலாம்.
மேலும், கிழக்கு கல்வானில் 20 இந்தியர்கள் வீரமரணம் அடைந்த விவகாரம் தொடர்பாகவும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நிச்சயம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' - பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்