நாட்டின் அந்நிய நேரடி முதலீடு குறித்து மத்திய அரசு முக்கியப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீடு 19 லட்சம் கோடி ரூபாயாக (26 பில்லியன் டாலர்) இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இதே காலாண்டில் சுமார் 2.2 லட்சம் கோடி ரூபாயாக (30 பில்லியன் டாலர்) உயர்வைச் சந்தித்துள்ளது.
இதில் அதிகளவிலான அந்நிய முதலீடு மொரீஷியஸ், சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வந்துள்ளன. மொரீஷியஸ் 29 விழுக்காடும், சிங்கப்பூர் 21 விழுக்காடும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
அதேபோல் அதிக முதலீடு கண்ட துறைகளின் பட்டியலில் சேவைத் துறை முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் நிதித் துறை, வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, கணினி மென்பொருள், தொலைத்தொடர்பு ஆகியவை உள்ளன.
அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலத்தில் குஜராத் முதலிடம் வகிக்கிறது. அதற்கடுத்தபடியாக மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் முடக்கத்தைக் கண்டிருந்த நிலையில், அதைச் சீர்செய்ய அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசு கோரிக்கைவைத்தது. மேலும் உற்பத்தி, கனிமம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தாராளமயக் கொள்கையையும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 20 உங்களுக்கு; 80 ஓட்டுநருக்கு - வாடகை கார் நிறுவன நெறிமுறைகள்!