கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், 12 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கனோர் நோய்வாய்ப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து இதுவரையில் யாரையும் கைது செய்யாதது ஏன்? கசிவு ஏற்பட்ட ஸ்டைரீனை தென்கொரியாவுக்கு திருப்பி அனுப்ப அரசு அனுமதியளித்தது ஏன்? என்பன உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பி சமூக வலைதளங்களில் ரெங்கநாயகி (60) என்ற பெண் பதிவிட்டிருந்தார்.
இதற்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம்
- 505(2) பிரிவின்படி பகைமையை ஊக்குவித்தல்,
- 153(ஏ) பிரிவின்படி அவதூறு பரப்புவது,
- 188 பிரிவின்படி அரசின் உத்தரவை மதிக்காதது
உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"எனது நண்பரின் அனுமதியோடு அவருடைய பதிவுகளைத்தான் நான் பகிர்ந்தேன். அந்தப்பதிவில் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என ரெங்கநாயகி விளக்கம் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட பெண் தெலுங்கு தேசம் கட்சி சார்பாளர் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. ரெங்கநாயகி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசு அறிவித்த இந்த நிதி திட்டத்தால் ஒரு பயனும் இல்லை- குமுறும் மாநில அரசுகள்