தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஜே.சி. திவாகர் ரெட்டி அம்மாநில காவல் துறையினரை தரக்குறைவாக விமர்சித்ததைத் தொடர்ந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஹிந்துபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கொரண்ட்லா மாதவ் காவலர் ஒருவரின் காலணியை முத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மாதவ், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதிலும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த காவல் துறையினரை தான் மதிப்பதாகவும் அதனால் தான் அவர்களின் காலணிகளை முத்தமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அர்ப்பணிப்புடன் பல காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர் என்றும் ஜே.சி. திவாகர் அதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜே.சி. திவாகர் ரெட்டி கடந்த புதன்கிழமை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், காவல் துறையினரை தங்கள் கால்களை நக்கிப் பிழைக்க வைப்போம் என்கிற தொனியில் தரக்குறைவாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் உளவாளி உத்தரப் பிரதேசத்தில் கைது?