மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜகவின் மேல்மட்டத் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்கத்தாவிற்கு வந்தவண்ணம் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்தத் தலைவருமான அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு கொல்கத்தா சென்றார்.
இன்று காலை மித்னாபூர் மாவட்டத்திற்கு சென்ற அவர், அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கும், சித்தேஷ்வரி காளி கோவிலுக்கும் சென்று வழிபட்டார். மாலையில் அவர் பாஜக ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையே, பெலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் அமித்ஷா மதிய உணவருந்தவுள்ளதாகவும், இரவு கொல்கத்தாவில் அவர் தங்கியுள்ள ராஜர்ஹாட் விடுதியில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை, பிர்பம் மாவட்டத்திலுள்ள போல்பூர் என்னும் பகுதிக்கு செல்லும் அமித்ஷா, அங்குள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார். பின்னர் வங்க கிராமியப் பாடகர் ஒருவர் வீட்டில் உணவு உண்ணும் அவர், மாலையில் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களை சந்திக்கவுள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது, அண்மையில் திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுவேந்து அதிகாரி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள இரண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மேலும் இருவரும், அவருடன் பாஜகவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமரின் அலட்சியத்தால் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு - ராகுல் குற்றச்சாட்டு